திருவருட்பா: மருந்தறியேன் மணிஅறியேன் - SPB

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • திருவருட்பா: 3313.
    மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
    மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
    திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
    செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
    இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
    எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
    இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
    உரை:
    மருத்துவ நெறி யுரைக்கும் மருந்தும் மணியும் மந்திரமும் அறியேன்; இயற்கையும் செயற்கையுமாகிய அறிவில்லேன்; வாழ்க்கை இயல்பும் அதற்கமைய என்னைத் திருத்திக் கொள்ளும் திறமும் அறியேன்: திருவருள் செய்யும் நற்செயலை அறியேன்; அருட் செயல் ஞானப் பேற்றுக்குத் துணை செய்யும் அறம் செய்யும் வகையும் மன மடங்கும் திறமாகிய ஓரிடத்தேயிருந்து ஒன்றியிருத்தலும், அதன் பயனறிந்த பெரியோர்களை வழிபடலும் அறியேன்; இவை யாவும் அறிந்தோர் எய்தும் நின்னுடைய மணியிழைத்த சிற்றம்பலத்தைச் சேரும் திறம் அறியேன்; அஃது இருந்த திசை தானும் அறியேன்; இந் நிலையில் நான் நின்னுடைய ஞானாகாயத்திற் புகுவேன்; எனது இயலாமையை யாரிடம் உரைப்பேன்; எதனைச் செய்வேன்; ஒன்றும் தெரியேன். எ.று.
    மருந்து - நோயும் நோய் முதலும் நாடி அது தீரும் வாயிலாக உலகியற் பொருள்களைக் கொண்டு செய்யப்படுவது. நோய் நீக்கத்துக்காகக் காப்புச் செய்வது மணி; அது மணி மாலையும் அக்குமணி மாலையுமாம். நோய் பெருகாமற் சுருக்குதற்கு மனத்தால் எண்ணப்படும் திருவைந்தெழுத்து முதலியன மந்திரமாகும். தன்னால் வருவனவும் பிற வுயிர்களால் உண்டாவனவும் தெய்வத்தால் தோன்றுவனவுமாகிய நோய், மணி மந்திர மருந்துகளால் தீரும் என்பர். இம் மூன்றும் ஆதி பௌதிகம் ஆதியான்மிகம், ஆதி தெய்வீகம் என வழங்கும். மதி - இயற்கையறிவு; இது செய்யத்தக்க தென அனுபவத்தாற் பெறும் அறிவு. விதி - சான்றோர் நூல்கள் வாயிலாக இவை செய்தற் குரியன விதிக்கும் செயற்கையறிவு. வாழ்க்கை நிலை - காலந்தோறும் இடந்தோறும் மாறியியங்குவது உலக வாழ்வின் இயல்பு. முக்குண மயக்கத்தால் தவறு செய்தல் இயல்பாதலால், தவறுகளை அறிவால் எண்ணி யறிந்து திருந்தி யியல்வது நன்முறையாதலால், “திருந்தறியேன்” என்றும், முக்குண வியக்கமும் உடற்கூறுகளின் இயக்கமும் உணர்வியக்கமும் உலகியற் பொருளியக்கமும் யாவும் திருவருள் இயக்கமாதலால் அதன் செயல் வகைகளை அறியேன் என்பாராய், “திருவருளின் செயலறியேன்” என்றும் இயம்புகின்றார். திருந்து - திருந்துதல்; நெறிப்படுதல். முதனிலைத் தொழிற் பெயர். திருவருளாவது, சிவபரம் பொருளின் அருட் சக்தியாகும். உலகை இனிது இயக்கி உயிர் வகைகள் வாழ்வு நடத்தி இறவாப் பிறவா இன்ப நிலை எய்துதற்கு உதவுதல் பற்றி, “அருட் சத்தி” எனப்படுகிறது. இதனைப் பொதுவாகத் திருவருள் என்பதும், இதன் உணர்ந்தொழுகும் அறிவைத் திருவருள் ஞானம் என்பதும் சான்றோர் மரபு. அறம், செய்தற்குரிய தென அறுதி யிடப்பட்ட நற்செயல்; இதனைக் கடன் என்றும் கூறுவர். நல்லவையெல்லாம் கடன்” (குறள்) எனப் பெரியோர் உரைப்பது காண்க. அறவகையை அறிந்து செய்யவில்லை என்றற்கு “அறம்தான் செய்தறியேன்” என்று கூறுகின்றார். அறத்தைச் செய்தற்கும் செய்யா தொழிதற்கும் மனம் காரணமாய் ஐவகைப்பட்ட பொறிகளின் வாயிலாக ஒடுக்கமின்றி அலையும் இயல்பினதாகலின், “மனமடங்கும் திறத்தினில் ஓரிடத்தே இருந்தறியேன்” என இசைக்கின்றார். எங்கும் திரிதலின்றி ஓரிடத்தே இருந்த வழி மனத்தின் இயக்க வெல்லை சுருங்கி ஒன்றின்கண் ஒன்றி நிற்றலின், “ஓரிடத்தே” என விதந்து மொழிகின்றார். ஓரிடத்தேயிருந்து ஒன்றிய மனமுடைய நன்மக்களை யோகியர் என்பர். அப்பெருமக்களைக் கண்டு வழிபடுவது மன வடக்கத்துக்கு உபாயமாதலால், “அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்” என வுரைக்கின்றார். அறஞ்செய்து மனவடக்கமுற்று அடையத் தக்கது தில்லைச் சிற்றம்பலம் என்பாராய், “எந்தை பிரான் மணிமன்றம் எய்த அறிவேனே” என்றும், மாட்டாமை தெரிவித்தற்கு “இருந்த திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் ஏது மறிந்திலனே” என்றும் இயம்புகின்றார்.
    நன்றி: www.tamilvu.org...
    காப்புரிமை: இந்த காணொளி எனக்கு உரியதல்ல; நண்பர் எனக்குப் பகிர்ந்தது. பொதுமக்கள் பார்த்து இன்புற பகிர்கிறேன்.

КОМЕНТАРІ • 54