He giveth more grace when the burdens grow greater - Tamil - பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும்!

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • English by Annie Johnson Flint
    இந்தப் பாடல் ஆசிரியரை அறிவது, இந்தப் பாடலின் அருமையை அறிய உதவி செய்யும். இந்தப் பாடலை எழுதியவர் ஆனி ஜான்சன் பிளின்ட் என்ற பரிசுத்தவதி. இவர் நூற்றுக்கணக்கான பாடல்களும், கவிதைகளும் எழுதியுள்ளார். இவருடைய பாடல் ஒவ்வொன்றும் ஆழியில் எடுத்த முத்து, நெருப்பில் புடமிடப்பட்ட பொன். ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் வலி நிறைந்த ஒரு வரலாறு உண்டு.
    இவர் 1866ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்திலுள்ள வைன்லேண்ட் என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று வயதாகும்போது, இவருக்கு ஒரு தங்கை பிறந்தாள்; அந்தப் பேறுகாலத்தின்போது இவருடைய அம்மா, தன் 23ஆவது வயதில், இறந்தார். இவருடைய அப்பா தன் இரண்டு குழந்தைகளோடு தன் நண்பர் ஒருவருடைய விதவை-மனைவியின் வீட்டில் தஞ்சமடைந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். புதிய வீட்டில் அவர்களுக்கு விடுதலை இல்லை. அழையா விருந்தாளிகளைப்போல் நடத்தப்பட்டார்கள். விவரிக்கமுடியாத வேதனை. இவர்களுடைய கையறு நிலையை அறிந்த அருகில் வாழ்ந்த ஓர் ஆசிரியை இவர்களைப்பற்றி குழந்தையில்லாத ஒரு தம்பதியிடம் அடிக்கடி பேசினார். அவர்கள் இவர்களைத் தத்தெடுக்கச் சம்மதித்தார்கள். இவருடைய அப்பாவும், தன் உடல் நலத்தையும் குழந்தைகளின் தன் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, தத்துக்கொடுக்கச் சம்மதித்தார். இரு குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்தவர்கள்தான் பிளின்ட் தம்பதிகள்.
    ஆனியின் ஆறாவது வயதில் அவருடைய அப்பா காலமானார். பிளிண்ட் வீட்டில் பிள்ளைகள் நல்ல கிறிஸ்தவர்களாக வளர்ந்தார்கள். சிறு வயதிலேயே ஆனி இரட்சிக்கப்பட்டார். அந்த வீட்டில் ஒரு பெரிய நூலகம் இருந்தது. நிறைய புத்தகங்களையும் படித்தார். அப்போதே அவர் கவிதைகளும் எழுத ஆரம்பித்தார்.
    பள்ளிப்படிப்பை முடித்து, ஆசிரியர் பயிற்சி பெற்று, ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். ஓராண்டு கழிந்தது. இரண்டாம் ஆண்டு இவருடைய மூட்டுகளில் மூட்டுவாதத்தின் அறிகுறிகள் தென்பட்டன. நாட்கள் செல்லச்செல்ல மூட்டுவலி அதிகமாயிற்று. தாங்கொணா வலி. மிகக் "கொடிய மூட்டுவலி" நோயால் பாதிக்கப்பட்டார். மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டது; மூட்டுகள் விறைத்தன; நகரும்போது வலி, நடக்கும்போது வலி; அசைவின்போது மூட்டுகளில் உறுத்தல்; மூட்டுகளில் இயல்பாகவே பலவீனம், நிலையாக, நேராக நிற்க முடியவில்லை. விரல்கள் மடங்கின; தோல் மிருதுவாயிற்று; மூன்றாம் ஆண்டு அவர் வேலையை விட்டுவிட்டார். அவருடைய வளர்புப் பெற்றோர்களும் அடுத்தடுத்து காலமானார்கள். மீண்டும் அனாதையானார்.
    இந்தக் காலகட்டத்தில்தான் அவர் பாடல்களும், கவிதைகளும் எழுத ஆரம்பித்தார். அவர் தன் வலிகளையும், வேதனைகளையும், இழப்புகளையும்பற்றி பாடல்கள் எழுதியிருக்கலாம். 18 வயதில் ஆரம்பித்த மூட்டுவாதம் 66 வயதுவரை 48 வருடங்கள் நிலைத்தது, நீடித்தது. இந்த 48 வருடங்களில் 37 வருடங்கள் பிறர் உதவியின்றி ஒரு துரும்பைக்கூடத் தூக்கமுடியாத நிலையில் அவர் மூட்டுவாத நோயினால் ஒடுங்கி, ஒரு மூலையில் முடங்கிக்கிடந்தார். ஆனால், அவர் தம் வாழ்வில் தேவ சித்தம் நிறைவேறக்கடவது என்று அமர்ந்திருந்தார். வாழ்வில் உயிர்களையும், உறவுகளையும், வசந்தத்தையும் இழந்தவர். ஆனால் வாழ்வின் நிலை மாறாவிட்டாலும், மாறாதவர் கூட இருக்கிறார் என்று அவர் விசுவாசித்தார். "தேவன் என்ன செய்ய வேண்டும் என்று நாம் அவருக்குக் கட்டளை கொடுக்க முடியாது. அவர் தேவன். அவர் தம் விருப்பம்போல் செயல்படலாம்," என்பது அவர் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம். எனவே அவர் தன் பாடல்களில் தேவனை உயர்த்தினார், தன் கண்களை அவர்மேல் நிறுத்தினார், தன் விசுவாசத்தை அவர்மேல் குவித்தார்.
    அவருடைய பாடல்களும், கவிதைகளும் CHRISTIAN ENDEAVOUR WORLD, SUNDAY SCHOOL TIMES ஆகியவைகளில் வெளியிடப்பட்டன.அவர் தான் எழுதிய பாடல்களின்மூலம் உலகம் முழுவதும் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அறிமுகமானார். இவருடைய பாடல்கள் ஆறுதலின் ஓடையாகப் பாய்ந்தோடுகின்றன. 2 கொரிந்தியரில் பவுலின் அனுபவத்தைப்போல எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் நொறுங்கிப்போகாத, பெலவீனத்தில் கிறிஸ்துவின் கிருபையினால் பெலன்கொண்ட , அவருடைய மனப்பாங்கும் மனவலிமையும் அவருடைய கவிதைகளில் மிளிர்கின்றன. "பாரங்கள் கூடும், கிருபையும் கூடும்" என்ற இந்தப் பாடல் அவருடைய பாடல்களுக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
    Tamil by Milton Rajendram
    1. பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும்!
    பாடுகள் சேரும், உம் பெலனும் சேரும்!
    சோர்வு பெருகும், உம் பரிவும் பெருகும்!
    சோதனைகள் சூழும், உம் ஓய்வும் சூழும்!
    உம் அன்பின் எல்லையை, அருளின் அளவை
    ஆற்றலின் வரம்பைக் கண்டவர் யார்?
    இயேசுவில் முடிவில்லா உம் செல்வங்களை
    ஈகின்றீர், ஈகின்றீர், மேலும் ஈகின்றீர்.
    2. நம் தாங்கும் திறன் தீர்ந்து வற்றிப்போகையில்,
    நம் பெலன் பாதியில் இற்றுப்போகையில்,
    பூவின் வளங்கள் எல்லாம் அற்றுப்போகையில்,
    நம் தந்தை வழங்கத் தொடங்குகின்றார்!
    3. தேவனின் வளங்கள் உன் தேவையை மிஞ்சும்,
    அஞ்சாதே! ஈவதே தந்தையின் நெஞ்சம்!
    சாய்ந்துகொள், தாங்குவார்! உன் பாரங்கள் கொஞ்சம்!
    தந்தையின் நித்திய புயம் உன் தஞ்சம்.

КОМЕНТАРІ • 9